பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி?
ஒரு நாளும் உங்களால் உங்கள் பிரச்சினையை நிரந்தரமாகத் தள்ளிவைக்க முடியாது.
பிரச்சனையோடு சண்டை போடும் அந்த முயற்சியில் நீங்கள் எப்போதும் உங்கள் பிரச்சனைக்கு அருகிலேயே இருப்பீர்கள்.
இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஓர் உண்மை புரியும்.
பிரச்சனையை உருவாக்கிய அதே மனம்தான் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
அது எப்படிச் சாத்தியமாகும்? உங்களை நீங்களே தூக்கிக் கொள்ள முடியுமா? கையைக் கட்டிக்கொண்டு கொஞ்சதூரம் குதிக்கலாம்.
ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்களை நீங்களே தூக்கிக் கொள்ளும் முயற்சி கேலிக் கூத்தில் தான் முடியும்.
நீங்கள் மீண்டும் அதே பூமியில் தான் விழுவீர்கள்.
நாய் தன் வாலைத் தானே கவ்வ முயற்சிப்பதை போன்றது உங்கள் செயல்.
அதனால் ஒன்றும் செய்யாமல் உன்னிப்பாகக் கவனியுங்கள்.
போகப்போக ஒரு பற்றின்மை உண்டாகும். அந்தப் பற்றின்மையில் எல்லாம் அழிந்துவிடும்.
ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருங்கள்.
இருப்பு நிலையை அனுபவியுங்கள்.
நடக்கும் வேடிக்கையைக் கவனியுங்கள்.
இந்த மனிதனுக்கு நம் மேல் அக்கறை இல்லை என்று உங்கள் பிரச்சனை புரிந்துகொள்ளும்.
அதன்பின் அது விலகிச் சென்றுவிடும்.
அழையாத விருந்தாளி வீட்டிற்கு வந்தால் வீட்டுக்காரர் என்ன செய்ய வேண்டும்?
ஒன்றும் செய்யக்கூடாது.
வா என்று வரவேற்கக் கூடாது.
முகம் கொடுத்துப் பேசக்கூடாது.
ஒன்றுமே செய்யாமல் அந்த வேண்டாத விருந்தாளியை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.
எவ்வளவு நேரம்தான் அந்த விருந்தாளியால் தாக்குப்பிடிக்க முடியும் சொல்லுங்கள்?
அவர் வெறுத்துப்போய் வெளியேறி விடுவார்.
அதை விட்டு விட்டு அவரைப் போ என்று துரத்தினால், அவருடன் சண்டை போட்டால் அவரும் பதிலுக்கு சண்டை போடுவார்.
வாக்குவாதம் தொடரும். அவர் நீண்ட காலம் உங்கள் வீட்டிலேயே தங்கி இருப்பார்.
நீங்கள் தேவையில்லாத மன அழுத்தத்தில் உழன்று கொண்டிருப்பீர்கள்.
உங்கள் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் ஓர் அழையாத விருந்தாளிதான்.
உங்கள் மனம் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வேண்டாத விருந்தாளிதான்.
அதை எதிர்க்காதீர்கள். அமைதியாக எதுவும் செய்யாமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த பிரச்சனையை முறைத்துப் பார்த்தபடி இருங்கள். வந்த பிரச்சனை தன்னால் போய்விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக